பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், பள்ளி முதல்வர் கீதாவிடம் காவல்துறை இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில், பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களையும் விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா, அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜாரானார்.
முதல் நாள் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 3 மணி நேரத்திற்கு மேல் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலனின் நடவடிக்கைகளை, பள்ளி நிர்வாகம் ஏன் கண்காணிக்கவில்லை, ஆன்லைன் வகுப்பிற்கு யார் கண்காணிப்பாளர் என அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன.
பல கேள்விகளுக்கு அவர் தெரியாது என்றே பதிலளித்ததாக கூறப்படுகிறது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகித்துள்ளது.
ராஜகோபாலன் மீது துணை ஆணையரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இதுவரை 30 புகார்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து மட்டும் 20 புகார்கள் வந்திருப்பதால், அப்புகார்களை அந்தந்த மாவட்ட போலீசார் விசாரிப்பர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே மாணவிகள் பாலியல் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பத்ம சேஷாத்ரி பள்ளியில் விபரம் சேகரிக்க சென்ற மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ராஜேந்திரன் மே 31ம் தேதி காலை 11 மணிக்கு குழந்தைகள் நல குழுமத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Discussion about this post