சென்னை தண்டையார்பேட்டை மார்கெட்டில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாததால், மார்கெட்டை இடமாற்றம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மார்க்கெட்டில், காலை வேளையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனர்.
மார்க்கெட் பகுதி குறுகலான தெரு என்பதால், பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற முடியாமல், நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
ஏற்கெனவே வடசென்னையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரம் போதுமானதாக இல்லை என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில், இள்ளலூர் கூட்டு சாலையில், மளிகை மற்றும் காய்கறிகள் வாங்க கூட்டம் அலைமோதியது.
இதனை கட்டுப்படுத்த ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பொருட்களை வாங்கிச் செல்வதற்காக, பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள காய்கறி மற்றும் பலசரக்கு கடைகளில், பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் வலம் வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post