ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை பெய்தது.
திருவொற்றியூர், எண்ணூர், மணலி, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், அண்ணாசாலை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அதேபோல புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பூந்தமல்லி, மதுரவாயல், போரூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
ஒரு மாதத்திற்கும் மேல் கோடை வெப்பம் வாட்டி வைத்த நிலையில், 2 நாட்களாக பெய்த மழையில் குளிர்ப்பிரதேசம் போல் காட்சியளிக்கிறது சென்னை.
வெப்பச்சலனம் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்திய கடலோரக் காவல்படை, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடலில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை கருதி நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, மணியன் தீவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தியுள்ளனர்.
Discussion about this post