தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவது அதன் வீரியத்தை வெளிச்சம் போட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது உறவினர்களை வேதனை தீயில் தள்ளியுள்ளது.
தமிழ்நாட்டில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 27 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால், புதிதாக வரும் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 26 பேர் கொரோனாவால் இறந்திருப்பது, பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில், ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பரிசோதனைகளை அதிகரித்து, சிகிச்சை முறையை தீவிரப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்த சகோதரிகளான ஜீவா, வசந்தா, கலா ஆகியோருக்கும், கலாவின் மகன் பாபுவுக்கும் தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 7 முதல் 15 மரணங்கள் வரை நிகழ்வதாகவும், ஆனால் அவையெல்லாம் கொரோனா கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உறவினர்களிடம் ஒப்படைப்பதே, பொய்க்கணக்கை உறுதிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கோவை ஆத்துப்பாலம் மின்மயானத்தில் வழக்கமாக நாளொன்றுக்கு 2 அல்லது 3 சடலங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது கொரோனாவால் ஆம்புலன்சில் 5 சடலங்கள் வரும் அளவுக்கு நிலைமை எல்லை மீறிச் சென்றுவிட்டது. எந்நேரமும் சடலங்கள் எரிந்துகொண்டே இருப்பதால் அப்பகுதியில் கரும்புகை வீசுகிறது. சடலங்களுடன் கண்ணீரும் கவலையுமாக காத்திருக்கும் உறவினர்களை, காண்பதே கதிகலங்கச் செய்கிறது.
Discussion about this post