தமிழகத்தில் கொனோரோ பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளான பால், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 10 மணி வரை மட்டும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி பள்ளி வளாகம் மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் சந்தையில், காய்கறிகள் வாங்க கூட்டம் அலைமோதியது.
போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தும், அதனை பொருட்படுத்தாமல், மக்கள் காய்கறிகளை வாங்குவதிலேயே குறியாக இருந்தனர். இதனால், கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் உழவர் சந்தை, காய்கறி வார சந்தை மற்றும் தினசரி காய்கறி சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், காய்கறி விற்பனையாளர்கள் அனுமதியின்றி உழவர் சந்தை மைதானம் அருகே காய்கறி விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகள் வாங்க குவிந்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும்பொருட்டு, நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஒசூரில் கொரோனா பரவலை கட்டுபடுத்த, உழவர் சந்தை தற்காலிமாக சந்தை மூடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் சந்தை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆர்.வி. அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மைதானம், ராமநாயக்கன் ஏரிக்கரை காலியிடம், விஜய விநாயகர் சத் சங்க மைதானம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட சந்தை, இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.
Discussion about this post