திருச்சியில் இருக்கும் திமுக கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் புதிதாக பதவிக்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்பி கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு அனுப்பப் பட்ட அன்பில் மகேஷ் அதிகாரிகளை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
கடந்த 17 ஆம் தேதி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள திமுக அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகர காவல்துறை ஆணையர் அருண், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோரை வரவழைத்து கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை கேலிகூத்தாக மாற்றி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது ஒரு தவறான முன்னுதாரணமாக விளங்குவதாக அன்பில் மகேசுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைச்சர் அன்பில் மகேஷை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி. குமார் கடிதம் எழுதி இருக்கிறார்.
அன்பில் மகேஷின் இந்த அதிகார துஷ்பிரயோக செயல் அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.
Discussion about this post