தரணி போற்றும் தத்துவ ஞானியான ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் இன்று. கவிஞர், இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவரும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரருமான அவரின் சிறப்புகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்…
1861-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் ரவீந்திரநாத் தாகூர். பிறந்தது வசதியான குடும்பத்தில், வளர்ந்தது செல்வ செழிப்பில்.. பாடப்புத்தகத்தை துன்பமாக கருதிய அவர், கவிதை புத்தகங்களை விரும்பி படித்தார். அதனால் தான் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகள் எழுதி ஆச்சரியமூட்டினார்.
இயற்கைக்கும் இறைவனுக்குமான தொடர்பை மனித சமுதாயத்தின் வழியே விளக்கும் வகையில் அவர் எழுதிய கீதாஞ்சலி கவிதை தொகுப்பை 1910 ம் ஆண்டு வெளியிட்டார். கீதாஞ்சலி கவிதை தொகுப்பிற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவே, பெங்காலியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கீதாஞ்சலி தான், 1913ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது. இதன் மூலம் நோபல் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பதுடன் முதல் ஐரோப்பியர் அல்லாதவர் என்ற பெருமையைப் பெற்றார்.
2 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி மெட்டும் அமைத்தார். ஜனகனமன என காதில் விழுந்தவுடன் நாம் உறைந்து நின்று வணக்கம் செலுத்தும் நம் இந்திய தேசிய கீதத்தின் தந்தை. இதேபோல் பங்களாதேஷின்‘அமர் சோனா பங்களா’தேசிய கீதம், இலங்கையின் தேசிய கீதமும் தாகூரின் கவிதையை அடிப்படையாக கொண்டது.
தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தவர், 20 வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை எழுதிய தாகூர், தன்னுடைய 60 வயதில் ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டார். மேலும் 1921-ல் தாகூர் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவிய அவர், இதற்காக பல நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு நிதி திரட்டினார். 1941-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி காலமானார்.
இந்திய இலக்கியத்தில் மறுமலர்ச்சி செய்தவர், நம் தேசத்தின் தந்தை காந்திக்கு‘மகாத்மா’பட்டத்தை வழங்கிய ரவீந்திரநாத் தாகூர், தேசம் உள்ளவரை தன் படைப்புகளால் வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்..
Discussion about this post