ஒட்டுமொத்தமாக ஐந்து படங்களை மட்டுமே இயக்கி, தமிழ் சினிமாவில் தனித்துவ மிக்கவர் என்ற அடையாளத்தை வென்றவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன். கருத்தியலின் ஊடகமாக சினிமாவை கையாண்ட அந்த ஒப்பற்ற கலைஞனின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம்…
தனது படைப்புகளில் இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசிவந்தவர், மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன். எளிய மக்களுக்கான அரசியலை, நசுக்கப்படும் அவர்களுடைய குரலை, சுரண்டப்படும் அவர்களுடைய உழைப்பை, பறிகொடுக்கும் அவர்களுடைய உரிமைகளை, உற்பத்தியின் வழியாக நியாயமாக கிடைக்க வேண்டிய லாபத்தை திரை மொழியில் அறிமுகப்படுத்தியவர். தனது முதல் திரைப்படமான ‘இயற்கை’ திரைப்படம் மூலம் தேசிய அங்கீகாரம் பெற்றார்.
மூன்றாம் உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை கெமிக்கல் ஆயுதங்கள். இந்த கெமிக்கல் ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தும் சோதனைச் சாலைகளாக ஏழைமக்கள் வசிக்கும் நாடுகள் பயன்படுத்தப்படுவதை ’ஈ’ படத்தின் வாயிலாக வெளிச்சம் போட்டுக் காட்டினார் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்
பேராண்மை படத்தில் காடும், காடு சார்ந்த மனிதர்களையும் பற்றி முடிந்தவரை அழுத்தமான ஒரு பார்வையைப் பதிய வைத்தார். வேறு கோணத்தில் யோசிக்க தமிழ் திரையுலகில் ஒருவர் இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
மாசுகளற்ற நிலம் இந்த மக்களின் உடமை என்பதை வலியுறுத்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தை தந்தார்.
அவர் இயக்கி வெளிவரவுள்ள லாபம் திரைப்படம், விவசாயிகளைப் பற்றி பேசுகிறது.
படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடையும் தருவாயில், கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்…
சென்சார் போர்டு நமக்குக் கொடுத்திருக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தில், சில அற்புதமான படங்களை கொடுத்திருக்கும் தோழர் எஸ்.பி.ஜனநாதனுக்கு என்னென்றும் சல்யூட் உண்டு..!
Discussion about this post