முழு ஊரடங்கு காரணமாக கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு திரும்புவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இரு மாநில எல்லையான ஜூஜூவாடியில், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அந்த மாநிலத்தில் நேற்றிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த தமிழர்கள், தனியார் வாகனங்கள் மூலமாகவும், நடந்தும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் இருமாநில எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு செய்தவர்கள் மட்டுமே, தமிழக எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இ-பதிவு இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். தமிழகத்திற்குள் வருபவர்களின் உடல் வெப்பநிலை, பரிசோதிக்கப்படுகிறது. தமிழக எல்லைக்குள் வருபவர்கள் ஒசூர் பேருந்து நிலையம் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதால், சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நீலிகிரி மாவட்டம் கூடலூர், கர்நாடகா கேரள எல்லைப் பகுதியாக உள்ளது. கக்கநள்ளா சோதனை சாவடி மற்றும் முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக செல்லும் சாலைகள் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தொடர்ந்து, இருமாநில எல்லையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post