மதுபோதையில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரை காவல்
துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
தேனி மாவட்டம் கம்பம் அருகே, காமயகவுண்டன்பட்டி செல்லும் இணைப்பு சாலையில் கடந்த 8-ம் தேதி தலையில் பலத்த காயங்களுடன் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் ஒன்று கிடப்பதாக கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் கம்பம் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மூதாட்டி குறித்தும், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கொலை நடந்த அன்று அந்த பகுதியில் நடமாடிய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளி தெருவை சேர்ந்த 24 வயதான ஞானேசன் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து கம்பத்தில் பதுங்கியிருந்த போலீசார் அவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 8-ம் தேதி அதிகாலை ஞானேசன் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதும், காமயகவுண்டன்பட்டி இணைப்பு சாலை செல்லும் வழியில் மூதாட்டி தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவரை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
பின்னர் சம்பவம் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக, மூதாட்டியின் கழுத்தை நெரித்து, தலையில் கல்லை போட்டு கொலை செய்து அருகே உள்ள தென்னந்தோப்பில் சடலத்தை மறைத்துவிட்டு தப்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை சம்பவம் குறித்து ஞானேசனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post