இந்தியாவின் முதல் ஸ்டெடிகேம் கேமராமேனும், திரைப்பட இயக்குநருமான ராஜிவ் மேனனின் பிறந்த நாளான இன்று, அவரை பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ராஜிவ் மேனன் என்ற பெயரை கேட்டவுடன், ரொமாண்டிக் ஹிட் படங்களின் இயக்குநர் என்பதே பலருக்கும் நினைவில் வந்தாலும், ஒளிப்பதிவிலும், ராஜிவ் மேனன் சாதித்தவைகள் ஏராளம்.
இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்டெடி கேம் கேமராவை பயன்படுத்தியவர் என்ற பெருமை இவரையே சேரும்.
தற்போது பாலிவுட்டில் பிரபலங்களாய் இருக்கும் ரவி. கே.சந்திரன், ரவி வர்மன், ராண்டி, ஆர்.டி. ராஜசேகர், காலமான பிரியன் என பலருக்கும் இவர்தான் குரு.
இயக்குநர் பாக்யராஜின் ஹிந்தி படமான ஆக்ரி ரஸ்தா, ஷியாம் பெனகலின் சுஷ்மன், தமிழில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கு, ஸ்டெடிகேம் மூலமான இவரது பங்களிப்பு மிக முக்கியமானது.
இந்த மாதிரி, கேமரா ஒர்க் ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் விளம்பர படங்களும் எடுக்க ஆரம்பித்தார்.
அப்போதுதான், இவருக்கு ஏ.ஆர். ரகுமானின் அறிமுகம் கிடைத்தது. இந்த அறிமுகம் தான், ராஜிவ் மேனன் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.
ஏ.ஆர். ரகுமானுடன், இவர் சேர்ந்து பணியாற்றிய விளம்பர படங்களுக்கு, அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பை ராஜிவ் மேனனுக்கு வாங்கி கொடுத்தது.
சிறந்த ஒளிப்பதிவாளராய் ஏராளமான ஹிட் படங்களுக்கு தனது பங்களிப்பை வழங்கிய ராஜிவ் மேனன், இடையில் மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் போன்ற திரைப்படங்களையும் இயக்கி, 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும், பிடித்த மற்றும் பரிச்சயமான இயக்குநர் ஆனார்.
இது மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினருக்கும் ஒளிப்பதிவு நுணுக்கங்களை கற்றுத்தரும் நோக்கத்தில், கேமரா இன்ஸ்டிடியுட்டையும் துவக்கினார்.
இதில் பயின்ற, காக்கா முட்டை மணிகண்டன், முண்டாசுப்பட்டி ஷங்கர், 96 ஷண்முக சுந்தரம், சூரரை போற்று நிகேத் பொம்மின்னு நிறைய ஒளிப்பதிவாளர்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கியுள்ளார் ராஜிவ் மேனன்.
இந்திய திரைத்துறையில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கியிருக்கும் ராஜிவ் மேனனின் வாழ்க்கை, சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கும் முன்னுதாரணமே……
நியூஸ் ஜெ செய்திகளுக்காக பிரபு…
Discussion about this post