1966 ஏப்ரல் 17 அன்று, கென்னடி ஜான் விக்டர் என்ற விக்ரம் பிறந்தது சென்னையில். கல்லூரியில் படிக்கும்போது ஒரு வாகன விபத்தில் படுகாயமடைந்து மூன்று வருடம் மருத்துவமனையிலிருந்த விக்ரம், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பிறகு தனது கனவு ஓட்டத்தை துவங்கினார். 1988ஆம் ஆண்டில் இயக்குநர் கே.பாலசந்தரின் ’கலாட்ட குடும்பம்’ தொலைக்காட்சி தொடர் மூலம் நடிப்பை துவங்கிவிட்டாலும், 1990-ம் ஆண்டில் தான் விக்ரமின் திரைப் பயணம் தொடங்கியது. ‘என் காதல் கண்மணி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம், தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீதரின் ’தந்துவிட்டேன் என்னை’, இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் ‘காவல் கீதம்’, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமான ‘மீரா’ ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அனைத்துமே தோல்வி அடைந்தன.
நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் விக்ரம் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அஜித்தின் அறிமுகப் படமான அமரவாதியில் அவருக்குக் குரல் கொடுத்தது விக்ரம் தான். தொடர்ந்து காதலன், மின்சார கனவு படங்களில் பிரபுதேவாவுக்கும், காதல் தேசம், வி.ஐ.பி., கண்டுக்கொண்டேன் கண்டுக்கெண்டேன் படங்களில் அப்பாஸுக்கும் குரல் கொடுத்திருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்த ரிச்சர்ட் அட்டபரோவின் ‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்குக் குரல் கொடுத்தவரும் விக்ரம்தான்.
மறுபுறம் ’புதிய மன்னர்கள்’, ‘உல்லாசம்’ என தமிழிலும், மலையாளம், தெலுங்கு என்று போய் துணை நடிகர் என்றெல்லாம் பாராமல் வெறியோடு நடித்துக்கொண்டே இருந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் 1999 வெளியான பார்த்திபனின் ‘ஹவுஸ்ஃபுல்’ படம் வரை பல படங்களில் நடித்தார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஒரு நிலையான இடத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த விக்ரமை நிலை நிறுத்தியது டிசம்பர் 1999ல் வெளியான ‘சேது’. பாலுமகேந்திராவின் பாசறையிலிருந்து வந்த முதல் படைப்பாளியான பாலா, இயக்குநராக அறிமுகமான இந்தப் படம், உண்மையில் விக்ரம் யார், ஒரு கலைஞனாக அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை திரையுலகத்துக்கு காட்டியது.
அடுத்ததாக ‘காசி’ படத்தில், கண்களை உள்ளே இழுத்துச் சிமிட்டியபடி ஆர்மோனியப் பெட்டியோடு பிறவியிலேயே கண்பார்வையற்றவரைப் போல நடித்து விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் விக்ரம். அதன்பிறகு தில், தூள், ஜெமினி, சாமி என வணிகப் பாதையிலும் அசாத்திய சாதனைகளை நிகழ்த்தினார் விக்ரம். கமர்ஷியல் மாஸ் படங்களில் நடித்துக்கொண்டே பாலாவுடன் மீண்டும் ‘பிதாமகன்’ல் கைகோர்த்தார். சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் சித்தன் கதாபாத்திரத்தில், வசனமே பேசாமல் நடித்து வியக்க வைத்த விக்ரம், 2003-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
தொடர்ந்து ‘அந்நியன்’ படத்தில் ராமானுஜம் என்கிற அம்பியாக, சமூக நலனுக்கு எதிரானவர்களைப் பழிவாங்கும் அந்நியனாக, நாயகியை விரட்டி விரட்டிக் காதலிக்கிற ரெமோவாக, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிற ‘மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சனாலிட்டி’ பாத்திரம். அதை இவரை விட வேறு யாரேனும் இவ்வளவு சிறப்பாய் செய்திருக்க முடியுமா? விக்ரமை பொறுத்தவரை, படம் முழுவதும் நடிக்கிற வேடமென்றாலும் சரி, கந்தசாமி திரைப்படம் போல, சில நிமிடங்களே வரும் பெண் கதாபாத்திரம் என்றாலும் சரி.. உழைப்பு நூறு சதவீதம் தான்!
அடுத்ததாக மணிரத்னத்துடன் இணைந்து ‘ராவணன்’. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக, இருமொழிகளில் எடுக்கப்பட்ட ஒரே படத்தில், தமிழில் நாயகனாகவும் இந்தியில் எதிர்மறை நாயகனாகவும் நடித்தவர் என்ற பெருமையை பெற்றார் விக்ரம்.
‘தெய்வத்திருமகள்’ திரைப்படத்தில் 6 வயது சிறுவனுக்குரிய மனவளர்ச்சியோடு படம் முழுக்க கிருஷ்ணாவாக வருவார். தழுதழுத்த குரலில் அவரது கை, கால் மட்டுமல்ல சைகைகளிலும் மழலை பேசினார். 5 வயது குழந்தை சாராவுடன் பாசத்தைப் பரிமாறும் காட்சிகளில் தானும் சகவயதுக் குழந்தையாகவே மாறியிருப்பார் விக்ரம்.
இதற்குப் பிறகு ஷங்கருடன் இரண்டாவது முறையாக விக்ரம் இணைந்த ‘ஐ’ தான் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்துக்காக ஒரு நடிகன், உடலளவிலும் மனதளவிலும் எடுக்கக்கூடிய மெனக்கெடல்களை நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு விரிவுபடுத்தினார்.
ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 எண்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான், என தொடர்ச்சியாக தோல்வி படங்களாக அமைந்தாலும், ரசிகர்கள் விரும்பும் நாயகனாகவே தொடர்ந்து வலம் வருகிறார் விக்ரம். தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்ரா படத்திற்காக பல கெட்டப்புகளை தீட்டியுள்ளார், மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் மகன் துருவ்வுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர மணிரத்னத்தின் கனவுப்படமான, கல்கியின் சாகாவரம் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி எடுக்கப்படும் படத்தில் ஆதித்த கரிகாலனாக தோன்றி மக்களுக்கு வீரமூட்ட உள்ளார். கூடவே கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சால்ட் & பெப்பர் ஹேர்ஸ்டைலில் ஸ்டைலிஷான உளவுத் துறை அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் குறையவில்லை விக்ரமின் கலை தாகம்..
Discussion about this post