சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மொத்தம் 14 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளும், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆயிரத்து 500 படுக்கை வசதிகளும், சென்னை பல்கலைக்கழகத்தில் 900 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதேபோல், சென்னை ஐ.ஐ.டியில் 820 படுக்கை வசதிகளுடனும், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, ஜவஹர் பொறியியல் கல்லூரி உள்பட மொத்தம் 14 இடங்களில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவையில், ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் ஏற்கனவே, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் படுக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது இருக்கும் படுக்கைகள் போதாத பட்சத்தில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Discussion about this post