சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 622ஆக அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அண்ணா நகரில் ஆயிரத்து 581 பேரும், கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 375 பேரும், ராயபுரத்தில் ஆயிரத்து 329 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் ஆயிரத்து 113 பேரும், அம்பத்தூரில் ஆயிரத்து 88 பேரும், அடையாறில் 920 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் 857 பேரும், வளசரவாக்கத்தில் 840 பேரும், ஆலந்தூரில் 698 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கடற்கரைகளில், வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை அறியாமல், மெரினா கடற்கரையில் காலை நேரத்தில் வழக்கம் போல் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஏராளமானோர் வந்தனர். அவர்களை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், கொரோனா கட்டுப்பாடு உத்தரவை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினர். இதனால், நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர். இதையடுத்து, காமராஜர் சாலையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
வார விடுமுறை என்றாலே திருவிழா போன்று காட்சி அளிக்கும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்களை வாங்க, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான அசைவ பிரியர்கள் குவிந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, அரசு அறிவித்த வழிகாட்டுதலை பின்பற்றாமல், மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு, ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர். இதனால், வவ்வால், மாவலாசி, சங்கரா, வஞ்சிரம், இறால் உள்ளிட்ட மீன்களின் விலை, இரண்டு மடங்காக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள், முககவசம் மற்றும் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
சென்னை தியாகராய நகரில், விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான மக்கள் கூடினர். காவல்துறையினர் ஆங்காங்கே முகாமிட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், கூட்ட நெரிசலால் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்க தவறினர்.
Discussion about this post