நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று தொடங்கியது.
தாமிரபரணி ஆற்றின் ராசியான விருச்சிக ராசிக்கு 12 வருடத்துக்கு ஒருமுறை குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். தற்போது விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி அடைந்ததையொட்டி, தாமிரபரணி புஷ்கர விழா இன்று தொடங்கி வரும் 23-ந் தேதி வரை நடக்கிறது.
144 வருடத்திற்கு ஒருமுறை வருகிற விழா என்பதால் இது மகா புஷ்கர விழா என அழைக்கப்படுகிறது. இதற்காக மக்கள் படித்துரைகளில் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மகா புஷ்கர விழா பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, அத்தாளநல்லூர், திருப்படைமருதூர், முக்கூடல், அகஸ்தியர் தீர்த்தக்கட்டம் தென்திருப்புவனம், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது.
இங்கு புனித நீராட வட நாட்டில் இருந்து ஏராளமான சாமியார்கள் நெல்லைக்கு வந்துள்ளனர். மகா புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆற்றில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு பாபநாசத்தில் மகா புஷ்கர விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொள்கிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு நடக்கும் துறவிகள் மாநாட்டில் விழா மலரை வெளியிட்டு அவர் பேசுகிறார். மகா புஷ்கர விழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங் களை சேர்ந்த 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Discussion about this post