தமிழ்நாட்டில் குட்கா பாண் மசாலா போன்ற போதை பொருட்கள் 2013 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு செங்குன்றத்தில் உள்ள MDM குட்கா கிடங்கில் டெல்லியை சேர்ந்த வருமான வரி துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கே கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில் 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை தமிழ்நாட்டில் விற்பனை செய்ய, யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் இருந்தாக கூறப்படுகிறது. அதில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயரும் இடம்பெற்றாதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி குட்கா வழக்கானது, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து சி.பி.ஐ வசம் சென்றது. இதை அடுத்து குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.இந்த சூழலில் கடந்த மாதம் காவல் துறை அதிகாரி ஜார்ஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் குட்கா வழக்கில் தம்மை சிக்க வைக்க சதி நடப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக உள்ள ஜெயக்குமார் மீது சில புகார்களை கூறியிருந்தார். இந்நிலையில் தான், சென்னை சி.பி ஐ அலுவலகத்திற்கு விழுப்புரம் எஸ் பி ஜெயக்குமார் நாளையும் நாளை மறுநாளும் ஆஜராக சி.பி.ஐ உத்தரவிட்டுள்ளது, இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post