கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்கப்படும் கருத்துகள், மக்களின் தீர்ப்புக்கு முன், முனை மழுங்கிப் போகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளனர். முழு மூச்சுடன் பணியாற்றி, தொண்டர்கள் வெற்றிக்கு தொய்வின்றி உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகைகளும், ஊடகங்களும் தங்களின் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ள, கருத்து கணிப்புகள் என்ற பெயரில் பொய் கருத்துகளை திணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கருத்துக் கணிப்புகள் கடந்த காலங்களில் தவறாக போனதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனக் கூறியுள்ளனர். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோர் தேர்தல் களம் கண்ட போது, கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி மாலை சூடியதை அறிக்கையில் இருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இத்தகைய, பொய் கருத்துக் கணிப்புகள், மக்களின் தேர்தல் தீர்ப்புகளுக்கு முன், முனை மழுங்கிப் போகும் என்றும்,அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து முழு மூச்சுடன் பணியாற்றி, தொடர் வெற்றிக்கு தொய்வின்றி உழைப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிமுக மீது மக்கள் பேரன்பு கொண்டுள்ளதாகவும், வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றி உறுதியானது என்றும் கூறியுள்ளனர். வருகிற தேர்தலில் வாகை சூடி, வெற்றி மாலையை புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரது நினைவிடங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிக்கையில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைபாளரும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post