சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்க வழித்தடத்தை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்ததை அடுத்து, பெண் ஓட்டுநர் ரீனா வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயிலை இயக்கினார். அதேபோல மறுமுனையில் விம்கோ நகர்-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயிலை, ஹரிபவானி என்ற பெண் ஓட்டுநர் இயக்கினார்.
அடுத்ததாக, சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4வது ரயில் வழித்தடத்தை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். 293 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை 21 கிலோமீட்டர் தூரத்திற்கு 4வது ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, விழுப்புரம் – தஞ்சாவூர் – திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். 423 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விழுப்புரம் – தஞ்சாவூர் – திருவாரூர் வரை 228 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கப்பட்ட ஒருவழி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2 ஆயிரத்து 640 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம் நடைபெற உள்ளது. அதேபோல, சென்னை தையூரில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐஐடி.க்காக அமைக்கப்பட உள்ள டிஸ்கவரி வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அதனையடுத்து, ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட, அர்ஜுன் எம்.பி.டி MK-1A ரக பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Discussion about this post