இன்னும் 10 நாட்களில் பயிர் கடன்கள் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசினார். அப்போது, அதிமுக அரசின் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் பட்டியலிட்டார். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு முழுக்க முழுக்க மாநில நிதி ஆதாரத்தில் இருந்து ஆயிரத்து 652 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியதாக கூறினார். மேலும், மக்களின் பேராதரவுடன் மீண்டும் முதலமைச்சராக வந்து அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
திமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் தலைவராக உள்ளதாகவும், அவருக்கு பிறகு உதயநிதி என வீட்டு மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும் கட்சி திமுக என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.
விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்து பயிர் கடனை ரத்து செய்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்னும் 10 நாட்களில் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கூறினார்.
முன்னதாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுங்கச்சாவடி பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தோப்பு வெங்கடாசலம், சிவசுப்ரமணி ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எல்லையான பல்லக்கவுண்டன்பாளையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
Discussion about this post