தை அமாவாசையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாட்டனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் அதிகாலை முதலே மக்கள் தங்கள் முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடிய மக்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் புரோகிதர்கள் மந்திரம் ஓத மக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தர்ப்பணம் கொடுக்க வரும் மக்கள் கட்டாயம் கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தொடர்ந்து கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய மக்கள் ராமநாத சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம், அம்மா மண்டபத்திலும் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே திரளான மக்கள் குவிய தொடங்கினர். காவிரியில் புனித நீராடிய அவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதேபோல் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் கூடிய மக்கள் கடலில் புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள், கன்னிகா பரவேஸ்வரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் திரளான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பவானி, காவிரி மற்றும் அமுத நதி சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் அதிகாலை முதல் குவிந்த மக்கள் ஆற்றில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். சேலம், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வழிபாடு நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால், காவிரி மற்றும் அரசலாற்றங்கரையில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாமக குளத்தில் மக்கள் கூட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால், அரசலாறு மற்றும் காவிரி ஆற்றுப் படித்துறைகளில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
Discussion about this post