தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர், சட்ட மேதை, மூத்த வழக்கறிஞர் என, பல்வேறு பொறுப்புகள் வகித்ததுடன், வாழ்நாள் முழுவதும் மக்கள் தொண்டாற்றி மறைந்தவர் பி.எச். பாண்டியன். தன்னலமற்ற சேவையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவரது சிறப்புகள் குறித்த தொகுப்பை தற்போது பார்ப்போம்..
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கோவிந்தபேரி கிராமத்தைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், 1945 ஆம் ஆண்டு பிறந்தார். 1960களில் வழக்கறிஞராக தனது பொதுவாழ்வை துவக்கிய அவர், மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், 1972 இல் அதிமுகவை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். அன்று முதல் 1988 ஆம் ஆண்டு வரை, அதிமுக வழக்கறிஞர் அணியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார் பி.எச்.பாண்டியன்.
1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், அதிமுக சார்பாக சேரன்மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு, பி.எச்.பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 1999இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பி.எச்.பாண்டியன் வெற்றி பெற்றார்.
பி.எச்.பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராகவும், மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்த காலங்களில், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலனுக்காக அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். குறிப்பாக கன்னடியன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க, சிறப்பு ஏற்பாடுகளை செய்ததால், கன்னடியன் கால்வாய் காவலன் பி.எச்.பாண்டியன் என்று, இப்போதும் அவரை அப்பகுதியினர் அழைக்கின்றனர்.
மேலும் வடக்கு பச்சையாறு திட்டத்திற்காக, உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி அதற்கான நிதியை பெற்றது, கடுமையான பசி நெருக்கடி காலங்களில், 10 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்தது என, இவரது சாதனைகள் ஏராளம்.
மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்ததோடு, 1980 முதல் 1985 வரை சட்டப்பேரவை துணைத் தலைவராகவும், 1985 முதல் 1989 வரை சட்டப்பேரவை தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது சட்ட நகலை எரித்ததைக் காரணம் காட்டி, ஒன்பது திமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார்.
மேலும், 1987 ஆம் ஆண்டு சட்டமன்றத்தை விமர்சித்து கேலிச்சித்திரம் வெளியிட்ட, ஆனந்த விகடன் பத்திரிகையின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவரை மூன்று மாதம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்து சட்டப்பேரவையின் வானளவிய அதிகாரத்தை நிரூபித்து காட்டினார். இவ்வாறு அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பதிலும், மக்கள் நலனை தன்னலமற்று செய்வதிலும் தன்னிகரற்று விளங்கிய பி.எச்.பாண்டியன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
Discussion about this post