தமிழகம் முழுவதும், தேவலாயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளுடன், கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஏசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோமில் உள்ள தேவாலயத்தில் கொரோனா காரணமாக, எளிமையான முறையில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில், ஏராளமான கிறிஸ்துவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. மறை மாவட்ட பேராயர் அந்தோணி சாமி திருப்பலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இயேசுபிரான் பிறப்பு குறித்து எடுத்து கூறினார். பிரார்த்தனையில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பு கருதி, சமூக இடைவெளியுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், கிறிஸ்துமஸ் தின கூட்டுப் பிராத்தனைகள் நடைபெற்றன. மஞ்சக்குப்பம் புனித கார்மேல் அன்னை ஆலயம் மற்றும் பாத்திமா தேவாலயத்தில், அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் உள்ள வரதராஜன்பேட்டை புனித அலங்கார அன்னை அந்தோணியார் தேவாலயம், புனித பாத்திமா பேராலயம் உள்ளிட்ட ஆலயங்களில், கிறிஸ்துவர்கள் திரளாக கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, தேவலாயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்த்தநாதபுரத்தில் உள்ள பழமைவாய்ந்த புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள, அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குழந்தை இயேசுவின் சொரூபத்தை, கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து சிறப்பு திருப்பலி நிறைவடைந்தது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் உள்ள பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றன.
புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இதேபோல், புதுச்சேரி பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதேபோல், தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில், நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
Discussion about this post