நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் முதியோர் கல்வி கற்கும் பெரியோர் வரை அனைவருக்கும் குடைகள் வழங்கி ஊக்கமூட்டி வருகிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை. யார் அவர்?
தமிழகம் முழுவதும் தற்போது எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்காக கற்போம் எழுதுவோம் என்ற கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள ஞானாம்பிகா உதவி தொடக்கப் பள்ளியில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் எழுதப் படிக்கத் தெரியாத 25 முதியோர்கள் ஆர்வமுடன் வந்து கல்வி கற்கின்றனர். கை நாட்டு வைத்தே காலம் தள்ளிவிட்ட அவர்கள், முதன் முறையாக அ, ஆ எழுதுவதும், கையொப்பமிட கற்றுகொள்வதும் அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இப்பகுதியில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தன் சொந்த செலவில் குடை வழங்கி வரும் அரசுப் பள்ளி ஆசிரியை வசந்தா, உற்சாகமாக கல்வி கற்கும் இந்த முதியோர்களுக்கு மழை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக குடைகளை வழங்கியுள்ளார். ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று மாணவர்களுக்கு குடை வழங்குவதோடு, அவர்களின் வாழ்வில் வசந்தம் வீச வைக்கும் வசந்தாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது.
Discussion about this post