அழிந்துவரும் பறவை இனமான சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பத்தாயிரம் கூடுகளை உருவாக்கியுள்ள கூடுகள் அமைப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்…..
மனிதர்களை சுண்டி இழுக்கும் அழகை எப்போதும் தன்னகத்தே கொண்டிருப்பது சிட்டுக்குருவிகள். தத்தித் தத்திப் பறக்கும் அழகையும், கூடுகட்ட இடம் தேடுவதையும், துருதுருவென தானியங்களை கொத்தி உண்பதையும், ஒன்றோடு ஒன்று கால்களில் முட்டு மோதி விளையாடுவதையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் கண்டு ரசித்திருப்போம். நமது வீட்டிலேயே ஏதோ ஒரு மூலையில் கூடு கட்டி, அதிகாலையில் அற்புதமாக கூச்சலிடும் அந்த ஒலியில்தான் சில காலங்களுக்கு முன்புவரை நாம் கண் விழித்து வந்தோம்.
அப்படியாக சுற்றிவந்த சிட்டுக்குருவிகள் இன்றைக்கு மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சிட்டுக்குருவியின் கூச்சல்கள் தற்போது கேட்பதில்லை. கூட்டின் எச்சங்களை கூட இன்றைய வீடுகளில் காண முடிவதில்லை. அழிந்துவரும் இனமாக மாறியிருக்கிற இவற்றை காக்க எண்ணிலடங்கா முயற்சிகளை அரசும், தன்னார்வலர்களும் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ”கூடுகள்” அமைப்பு சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கத்தை அதிகரிக்க கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சிட்டுக்குருவிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, இவர்கள் தயாரித்த கூடுகளை அந்த இடங்களில் வைக்கின்றனர். அந்த கூடுகளில் சிட்டுக்குருவிகள் குடியேறி இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. வடசென்னையில் பள்ளி மாணவர்கள் மூலமாக சிட்டுக்குருவிகள் உள்ள பகுதிகளில் இதுவரை ஆயிரத்து 250 கூடுகளை இந்த அமைப்பு வைத்துள்ளது. இந்த முயற்சிக்கு 70 சதவிதம் பலன் கிடைத்திருப்பதாக கூடுகள் அமைப்பை சேர்ந்த குருவி கணேசன் கூறுகிறார்.
கொரோனா காலத்திலும் இடைவிடாது பணியாற்றி வரும் இவர்கள், பத்தாயிரம் கூடுகள் தயாரிப்பதற்கான மரக்கட்டைகளை தயாராக வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறந்த பின்பு 30 பள்ளிகளை தேர்வு செய்து 5 ஆயிரம் மாணவர்களை கொண்டு கூடுகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். சிட்டுக்கருவிகளை காக்க மாணவர்கள் மட்டுமின்றி, தன்னார்வலர்கள் பலரும் தங்களோடு இணைய முன்வர வேண்டுமெனவும் கூடுகள் அமைப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.
நியுஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் வினோத் உடன் செய்தியாளர் ராகிணி…
Discussion about this post