விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள சம்மதமும் தெரிவித்துள்ள மத்திய அரசு, போராட்டத்தை கைவிட வேண்டும் என விவசாய சங்கங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் இரண்டு வார காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கங்களின் சார்பில் நேற்று நடைபெற்ற நாடு தழுவிய கடையடைப்பு போராட்டமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்தும் வகையில், வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள சம்மதித்துள்ள மத்திய அரசு, அதற்காக 20 பக்கங்கள் கொண்ட முன் மொழிவுகளை உருவாக்கியுள்ளது.
இதனை விவசாய சங்கங்களிடமும் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. குறிப்பாக, குறைந்த பட்ச ஆதார விலை என்பதை மத்திய அரசே தீர்மானிக்கும், விவசாய பொருட்கள் விற்பனையில் பிரச்னை ஏற்பட்டால் கீழ் நீதிமன்றங்களை அணுகலாம் உள்ளிட்ட திருத்த முன் மொழிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சட்டத்திருத்த முன் மொழிவுகளை விவசாய சங்கங்களிடம் மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், போராட்டத்தை கைவிட விவசாய சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. மூன்று மசோதாக்களையும் முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என்றும், வெறும் சட்டத்திருத்தம் மேற்கொள்வதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விவசாய சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post