நிவர் புயல் கரையை கடக்கும் போது தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், புயல் பாதிப்புகள் குறித்து சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அதிகாரிகள் குழு கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினார்.
புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்கும் வகையில், அம்மா உணவகங்கள் மூலம் உணவு தயாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், சென்னையில் 4 இடங்களில் பொது சமையல் கூடங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தர்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், சென்னையில் நாளை முதல் 830 எம்எல்டி குடிநீர் விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
Discussion about this post