நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் வரும் 25ம் தேதி மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். வரும் 25-ம் தேதி மிக கனமழையுடன், சூறைக் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், வருவாய், உள்ளாட்சி, தீயணைப்பு, நெடுஞ்சாலை, நகராட்சி, மின்வாரியம் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் 24ம் தேதி மதியம் ஒரு மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைக்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மீனவர்கள் தங்கள் படகுகள் கட்டுமரங்கள், மீன் வலைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தடையில்லாமல் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு, பாதுகாப்பான அளவில் இருப்பதை உறுதி செய்வதுடன், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய போதுமான மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து நிவாரண முகாம்களிலும் கிருமிநாசினிகள், முகக்கவசங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post