ஐ.பி.எல் தொடரின் 36வது போட்டியில், 2வது சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் ஒற்றை இலக்கிலும் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. சிறப்பாக ஆடிய டிகாக் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ரன்களை குவித்து வந்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் லோகேஷ் ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி வெறும் 7 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிவடைந்தது.
பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எண்ணிய நிலையில், பஞ்சாப் அணியின் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 5 ரன்களை விட்டு கொடுத்தார். இதனால், வெற்றியை தீர்மானிக்க 2வது முறையாக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2வது சூப்பர் ஓவரில் மும்பை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார். மயங்க் அகர்வாலும் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றி பெற செய்தார்.
ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Discussion about this post