தீண்டாமை கொடுமைக்கு காரணமான தி.மு.க. அதன் பின்னணியை மறைத்து, ஆளும் இயக்கத்தின் மீது பழி போட்டு அரசியல் நடத்த தி.மு.க. தலைவர் முயற்சித்திருப்பது, பித்தலாட்டத்தின் உச்சம் என்று அமைச்சர் பென்ஜமின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்த கொடுஞ்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க.-வில் தலை விரித்தாடும் சாதிய வன்மங்களை மறைப்பதற்கு பெருமுயற்சி எடுத்திருக்கிறார் ஸ்டாலின் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராஜேஸ்வரியை தரையில் அமர வைத்ததே துணைத்தலைவரான தி.மு.க.-வை சேர்ந்த மோகன்ராஜ் என்பது தான் உண்மை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா” என்று தயாநிதிமாறன் பட்டியலினத்து மக்களை இழிவு செய்த போது, அதற்கு ஒரு வரி கூட கண்டனம் தெரிவிக்காத ஸ்டாலின், மருத்துவ சமுதாய மக்களை “அம்பட்டையன்” என்று இழி வசனம் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜனையும் கண்டிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது போன்று பல சம்பவங்களில் பட்டியலின மக்களை இழிவாக பேசும் தி.மு.க.-வினரை கண்டிக்கவில்லை என்றும் அமைச்சர் பென்ஜமின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், சிதம்பரம் சம்பவத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீது பழிபோட முயற்சித்திருப்பது ஸ்டாலினின் அறியாமையை காட்டுகிறது என அமைச்சர் பென்ஜமின் காட்டமாக சாடியுள்ளார். அ.தி.மு.க. என்பது சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவத்தின் அடையாளமாகும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் பென்ஜமின், முதலியார்களும், வன்னியர்களும், கவுண்டர்களும் நிறைந்த ஈரோடு பகுதியில், சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியை அமைச்சராக்கி, சமூக நீதிக்கு சாட்சி சொன்ன இயக்கம் அ.தி.மு.க. என்றும் ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் தி.மு.க. பேர்வழிகளுக்கு பெரியார், அண்ணா ஆகியோரது கொள்கைகளை அலங்கார நாயகன் ஸ்டாலின், காணொலி காட்சிகள் மூலமாக போதிப்பது உத்தமம் என்றும், அப்படி போதிப்பதற்கு முன், அதனை ஸ்டாலினும் படித்து அறிந்து கொள்வது உத்தமத்திலும் உத்தமம் என்றும் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார்.
Discussion about this post