அதிக எண்ணிகையில் பிரசவம் பார்த்து திருவள்ளூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதில் அரசு மருத்துவமனைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மருத்துவ சேவையை சிறப்பாக வழங்கி வருகின்றன.
இந்தநிலையில், அதிக எண்ணிக்கையில் பிரசவம் பார்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாதனை படைத்துள்ளன. இந்த மாவட்டத்தில் உள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலமற்ற சேவையால் சிறப்பாக பிரசவம் பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் உதவித் தொகை, சத்தான உணவு, வாகன வசதி உள்ளிட்டவையும் கர்ப்பிணிகளுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரசவத்துக்காக வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள 43 சுகாதார மாவட்டங்களில், திருவள்ளூர் சுகாதார மாவட்டம் அதிக எண்ணிக்கையில் பிரசவங்களை பார்த்து சாதனை படைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் 643 பிரசவங்கள் இங்கு பார்க்கப்பட்டுள்ளன. இந்தச் சாதனையைத் தொடர்ந்து தக்க வைக்கும் கொள்ளும் வகையால், சிறப்பாக சேவையாற்ற மருத்துவ பணியாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post