எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடிய மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று… பாட்டுக்கோட்டையாக வாழ்ந்து மறைந்த அந்த சமூகத்தின் பாடகனை அறிந்து கொள்வோம்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் 1930-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் நாள் பிறந்தார் கல்யாணசுந்தரம். இளம் வயதிலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தான் பின்பற்றி வந்த கட்சியின் லட்சியத்தை வளர்ப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
தனது வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பள தொழிலாளர், நாடக நடிகர் என பல தொழில்களில் ஈடுபட்டவர் பட்டுக்கோட்டை. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 1954-ம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடல்கள் எழுதினார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில் பாடல் எழுத கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கல்யாணசுந்தரத்திற்கு வெற்றிமேல் வெற்றி குவியத் தொடங்கியது. 1956-க்குப் பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களோடு பல படங்கள் வெளிவரத் தொடங்கின. குறிப்பாக எம்ஜிஆர் படங்களில் இடம்பெற்ற தத்துவப்பாடல்கள் அவரின் திறமைக்கு கிடைத்த மகுடமாய் அமைந்தது.
மக்களுக்கான உரிமைகளையும், தேவைகளையும், அறியாமைகளையும் தனது தனித்துவமான பாடகள் மூலம் எடுத்துக் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 1959-ம் ஆண்டு அக்டோபர் 8 நாள் உடல்நலக்குறை காரணமாக, தனது 29-வயதிலேயே காலமானார்.1993-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பின்படி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அனைத்து பாடல்களும் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. காலத்தால் அழியாத பாடல்களை தந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் என்றும் மக்கள் மனதில் உறவாடும்…
Discussion about this post