கொரோனா சூழலால் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாநில அரசுகளே முடிவெடுக்க, மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வகுப்பறைகள், மேஜை, நாற்காலிகள் உட்பட அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் அவசரகால தேவைக்காக தனி குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பாதுகாப்பான இடைவெளியில் அமர்வதை பள்ளி, கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், விழாக்கள், நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் முன்னர் மாணவர்கள் அனைவருக்கும் புத்தகங்களை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் அலுவலர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிய நேரத்தில் சூடான உணவுகளையே வழங்க மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post