கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல்.2020 தொடரின் 9வது போட்டி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் எதிராக சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக விளாசினர். அணியின் ஸ்கோர் 183 ரன்களை எட்டியபோது கே.எல்.ராகுல் அவுட்டானார். 54 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்களுடன் ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் எடுத்து மயங்க் அகர்வால் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பூரன் தன் பங்கிற்கு 8 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 25 ரன்களை விளாசினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. மேக்ஸ்வெல் 13 ரன்களுடனும், பூரன் 25 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ராஜ்பூத் மற்றும் டாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தத் தொடங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லரும், ஸ்மித்தும் களமிறங்கினர். 4 ரன்களில் பட்லர் அவுட்டாக, ஸ்மித்துடன், சஞ்சு சாம்சன் இணைந்தார். இந்த இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. ஸ்மித் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்பட அரைசதம் விளாசி அவுட்டானார். தொடர்ந்து விளையாடிய சாம்சன் 16வது ஓவரில் அவுட்டானார். 42 பந்துகளில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசிய சஞ்சு சாம்சன் 85 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முக்கியமான கட்டத்தில் விக்கெட் விழுந்ததால் அணிக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அடுத்ததாக களமிறங்கிய திவாட்டியா காட்ரல் பந்துவீச்சில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாச ராஜஸ்தான் அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. 31 பந்துகளில் அரைசதம் விளாசி திவாட்டியாவும் அவுட்டாக, ஆர்ச்சர் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்களை விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் டாம் கரன் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தா.
இறுதியில் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 226 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஆர்ச்சர் 13 ரன்களுடனும், டாம் கரன் 4 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில், சமி 3 விக்கெட்டுகளையும், காட்ரல், நீசம், முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 42 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றிபெற்று டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளைப் பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
தொடரின் 10வது போட்டி ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
Discussion about this post