கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தை, 5 மாதங்களுக்குப் பிறகு இன்று நள்ளிரவு திறக்கப்படுகிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த மே மாதம் 5ஆம் தேதி கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து, திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டு, காய்கறி, மலர் விற்பனை நடைபெற்று வந்தன. இந்நிலையில், கொரோனா பரவல் குறையத்தொடங்கியதையடுத்து, பல்வேறு நெறிமுறைகளுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வணிக நிறுவனங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதோடு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது.
வணிக நிறுவனங்கள் செயல்படத்தொடங்கியதையடுத்து, கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று, கோயம்பேடு சந்தை செப்.28 முதல் செயல்படும் என்று அரசின் சார்பில் அறிவிப்பு வெளியானது. சந்தையை திறப்பது தொடர்பாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. மேலும், சந்தையை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவந்தன.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக 200 கடைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். தனிநபர் கொள்முதல் மற்றும் சில்லரை வணிகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post