திருச்சி அருகே பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இனாம்குளத்தூர் ஊராட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. அங்குள்ள பெரியாரின் சிலை மீது, மர்ம நபர்கள் காவி சாயம் பூசி, செருப்பு மாலை அணிவித்து சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், மணிகண்டம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பெரியார் சிலை மீது பூசப்பட்டிருந்த காவி சாயத்தை அகற்றினர். இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே, பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்செயலுக்கு, பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெரியார் மீது காவிச்சாயம் பூசப்பட்டதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்.” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post