சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 22 மற்றும் 23ம் தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிஐ, 2 மாதங்களுக்கு மேலாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில், மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், கடந்த ஜூன் 19ம் தேதி ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டதாகவும் சிபிஐ கூறியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை தவிர, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 காவலர்கள் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா சூழலிலும், மதுரையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த வழக்கில் மற்றவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.
Discussion about this post