இன்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி ப்ரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால், டெல்லி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ப்ரித்வி ஷா 5 ரன்களிலும், தவான் ரன் ஏதும் எடுக்காமலும், ஹெட்மெயர் 7 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஸ்ரேயாஸ் மற்றும் பண்ட் இணை பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. 17வது ஓவரில் 100 ரன்களை எடுத்தது டெல்லி அணி. பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஸ்டோனிஸ் களமிறங்கினார். பஞ்சாப் அணி வீரர்களின் பந்து வீச்சை பதம் பார்த்தார். குறிப்பாக கடைசி ஓவரில் ஜோர்டனின் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி, கடைசி பந்தில் ரன் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக 21 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 53 ரன்களை ஸ்டோனிஸ் எடுத்திருந்தார். அன்ரிச் 3 ரன்களுடனும், ரபடா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
பஞ்சாப் அணி தரப்பில் 4 ஓவர்கள் பந்து வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தினார். கோட்ரல் 2 விக்கெட்டுகளையும், ரவி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங் அகர்வால் களமிறங்கினர். நிதானமாக இருவரும் விளையாடிய நிலையில் 21 ரன்னில் ராகுல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் மயங்க் அகர்வால் போராடிக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பியதோடு, அடுத்த பந்தில் இரண்டு ரன்கள், மூன்றாவது பந்தில் பவுண்டரி விளாசிய மயங்க் அகர்வால் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். 1 பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ரபடாவிடம் கேட்ச் கொடுத்து ஜோர்டன் அவுட்டானார். இதனால் போட்டி சமனில் முடிந்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எடுத்தது.
வெற்றியை முடிவு செய்ய சூப்பர் ஓவர் முறை கையாளப்பட்டது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் ராகுல். அடுத்த பந்தில் அவுட்டானார். மூன்றாவது பந்தில் பூரன் அவுட்டானார். மூன்று பந்துகளில் 2 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.
3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி அணி. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லாமலும், இரண்டாவது பந்து அகலப்பந்தாக போனது. மூன்றாவது பந்தில் பண்ட் இரண்டு ரன்கள் அடிக்க 3-0 என்ற கணக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ அணிதரப்பில் ரபடா, அஷ்வின், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், மோகித் சர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 21 பந்துகளில் 53 ரன்களை விளாசிய ஸ்டோனிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடரின் 3வது போட்டி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே, நாளை (21-09-2020) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Discussion about this post