ராமேஸ்வரத்தில் சிறுவனைக் கடத்தி கொலை செய்ய முயற்சித்த 50 வயதுப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தின் புதுரோடு சுனாமி குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் 50 வயதான செல்வராணி. இவர் அருகில் உள்ள குப்பம்மாள் என்பவரின் வீட்டு வாசலில் குப்பையை கொட்டியுள்ளார். அதைப் பார்த்த குப்பம்மாளின் பேரனான நான்கு வயது சிறுவன் தாழை ஸ்ரீவரன், செல்வராணி குப்பை கொட்டியதாக தன் பாட்டியிடம் கூறியுள்ளான். அதனால் ஆத்திரமடைந்த செல்வராணி, சிறுவனைக் கடத்திச் சென்று வீட்டிற்குள் வைத்து கரண்டியால் தாக்கியுள்ளார்.
இதில் சுய நினைவிழந்த சிறுவனின் மீது இருந்த ஆத்திரம் அடங்காமல் அருவாமனையால் அடித்து நெற்றியில் காயம் ஏற்படுத்தி இருக்கிறார். இவ்வளவு அடிகளையும் தாங்கி சிறுவன் சும்மா இருப்பானா என்ன? வலி தாங்கமுடியாமல் கத்த, அவனை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யவும் முயற்சித்ததாக கூறப்படுகிறது.
வெகு நேரம் ஆகியும் சிறுவனை காணாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் சிறுவனை தேடிய போலீசார்… அருகில் உள்ள செல்வராணியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் குடிபோதையில் இருந்த செல்வராணி, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்து வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் மயங்கிய நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த சிறுவனை மீட்டனர்.
உடனே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, சிறுவனை அடித்து கொடுமைபடுத்திய செல்வராணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குப்பை கொட்டியதை சொன்னதிற்காக கொலை செய்யும் முயற்சியில் பெண் ஈடுபட்டது ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post