குஞ்சன் சக்சேனா திரைப்படத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சரண் ஷர்மா இயக்கத்தில், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள படம் குஞ்சன் சக்சேனா. இப்படம், இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படம், கடந்த மாதம் 12 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியானதும், குஞ்சன் சக்சேனாவுடன் விமானப்படையில் பணியாற்றிய முன்னாள் விங் கமாண்டர் நம்ரிதா சாண்டி, இந்திய விமானப்படையில் பாலின பாகுபாடு இருப்பதாக படத்தில் பொய்யாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தார். அதன்பிறகு, இந்திய விமானப்படை சார்பில் மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவிடம் புகாரளிக்கப்பட்டதோடு, படத்திற்கு தடை கோரி, மத்திய அரசு சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓடிடியில் படம் வெளியாவதற்கு முன்பே ஏன் நீதிமன்றத்தை அனுகவில்லை எனக் கேள்வி எழுப்பி, படம் வெளியான பிறகு தடைவிதிக்க முடியாது என உத்தரவிட்டது. ஆனால், பாலின பாகுபாடு உள்ளதாக சித்தரித்திருப்பது தவறானது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக தர்மா புரடக்-ஷன்ஸ் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் பதிலை எதிர்பார்ப்பதாகவும், படம் தொடர்பாக கருத்து தெரிவிக்க விமானி குஞ்சன் சக்சேனாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Discussion about this post