ஆள்கடத்தல் புகார் ஒன்றை விசாரிக்கப் போன மண்ணடி போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி தௌஃபீக் என்பவர் இதன் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து பதுங்கி இருந்த தௌஃபீக், மீண்டும் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டான் என்பதை அறிந்து அவனுடைய அத்தனை கோப்புகளையும் தூசி தட்டி எடுக்க ஆரம்பித்துள்ளனர் போலீசார். அப்படி என்ன உலகமகா பயங்கரவாதியா? என்றால்.. கிட்டத்தட்ட ஆம், என்பது தான் பதில்…
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் பிறந்தவர் தௌஃபீக். இஸ்லாமிய அடிப்படைவாதியாக வளர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் வீடுகளில் வெடிகுண்டு வீசி தேடப்பட்டும் குற்றவாளியாக உருவெடுத்தார். போலீசார் தேடியதால் போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு செல்லவும் முயன்றார். இந்நிலையில், 2008 ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தவரை 2011-ல் உத்தரப்பிரதேசத்தில் வைத்து கைது செய்தது தமிழக காவல்துறை.
இவ்வழக்கில் 2015 ஆம் ஆண்டு நீதிமன்ற பிணையில் வந்தார் தௌஃபீக். தலைமறைவாக இருந்த காலத்தில் வடஇந்தியாவில் தீவிரவாத குழுக்களுடன் சேர்ந்து ஆயுதப் பயிற்சியும் பெற்றதாக கூறப்படுகிறது. அங்கு பெற்ற போதனைகளை இங்குள்ள இளைஞர்களிடம் விதைக்க நாம் மனிதர் என்ற கட்சியை துவக்கியுள்ளார்.
ஹவாலா பண பரிவர்த்தனை போன்ற சட்ட விரோத செயல்கள் தான் தௌஃபீக்கின் அன்றாட செயல்பாடுகள். இதன்மூலம் கிடைக்கும் பணத்தை தௌபீக்கே எடுத்துக் கொள்வதால், அவருடைய கூட்டாளிகள் அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தான், ஹவாலா பண பரிமாற்ற பிரச்சினையில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த திவான் அக்பர் என்ற தொழிலதிபரை தௌஃபீக் கடத்த, அந்த வழக்கு இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மண்ணடி போலீசார் ஒருபுறமும், க்யூ பிரிவு போலீசாரும் மறுபுறமும் தௌஃபீக்கை தேடி வருகின்றனர்…
ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டு வைத்த வழக்கில் மும்பை போலீசாராலும், போலி பாஸ்போர்ட் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கிய வழக்கில் கேரள போலீசாராலும், கட்டப் பஞ்சாயத்து, ஆட்கடத்தல், செம்மரக்கட்டை கடத்தல் என்று தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் என மொத்தம் 14 இடங்களில் தௌஃபீக் மீது வழக்குகள் நடைபெற்று வருகிறது. இவ்வளவு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தௌபீக்கைத் தான் போலீசார் இப்போது மும்முரமாக தேடி வருகின்றனர்…
Discussion about this post