இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட ஒரு கை நீட்டி உதவி செய்யுங்கள் என்ற வரிகளுக்கு சொந்தகாரர் அன்னை தெரசா. தன் வாழ்நாள் முழுவதையும் தொண்டு செய்தே கழித்த அன்னை தெரஸாவின் பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம் …
அன்பு என்ற ஒற்றை வார்த்தை மூலம் உலகை வசப்படுத்திய அன்னை தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா போஜாயு. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறந்த அவர், பன்னிரண்டாம் வயதில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1929-ம் ஆண்டு தனது 19வது வயதில், மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்த அவர், தனது பெயரை ‘தெரசா’ என மாற்றிக் கொண்டு சமூக சேவையை தொடர்ந்தார்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், நோயுற்றவர்களைக் கண்டு வருத்தம் கொண்டார். டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய தெரசா, குழந்தைகளிடம் அன்பு காட்டி பாடம் கற்பித்தார். சில காலங்களிலேயே ‘இந்தியாதான் இனி என் தாய்நாடு’ என முடிவெடுத்த அவர், இந்தி மொழியும் கற்றுக் கொண்டார். மீண்டும் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டபோது, கல்வியுடன், சமூக சேவையும் செய்ய ஆரம்பித்தார். அன்றைய தினத்தில் ஐந்து ரூபாய் பணம், மூன்று நீல நிற சேலைகள்தான் அவரது சொத்தாக இருந்தது. 1950-ம் ஆண்டு ‘பிறர் அன்பின் பணியாளர்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி, சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இருந்தும் ஆதரவற்றும் அடைகலம் இன்றியும் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கருணை இல்லம் ஒன்றை உருவாக்க ஆசைப்பட்ட தெரசா, அரசின் உதவியுடன் ‘காளிகட்’ என்ற இடத்தில் ‘நிர்மல் ஹ்ருதய்’ என்ற முதியோர் கருணை இல்லத்தை ஆரம்பித்தார்.
பின்னாளில் அது, ‘காளிகட் இல்லமானது’. அதே ஆண்டு ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்ற சேவை அறக்கட்டளையைத் தொடங்கி, நோய்வாய்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து, தனது குழுவினருடன் வீதி, வீதியாக நிதி திரட்டச் செல்வார் தெரசா. அவ்வாறு செல்லும் போது பல முறை அவமானங்களையும், சங்கடங்களையும் அவர் சந்தித்தாலும், சற்றும் மனம் தளறாமல் தன் சேவையை தொடர்ந்தார். அன்னை தெரசாவின் சேவையை பாராட்டும் விதமாக 1962-ல் பத்மஸ்ரீ விருது, 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசு, 1980ல் இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது மற்றும் 1996ல் அமெரிக்காவின் கெளரவ பிரஜை உட்பட பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. உலக மக்கள் அனைவராலும் அன்னை என அன்போடு அழைக்கப்பட்ட தெரேசா, தனது இறுதி மூச்சு வரை, நலிவுற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்து, அவர்கள் மகிழ்ச்சியில் இறைவனை கண்டார்.
Discussion about this post