இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், ம.பி மற்றும் சட்டீஸ்கர் சட்டசபை தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் வெற்றி கொள்ளும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. டிசம்பர் 11-ம் தேதி 5 மாநில தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்புவெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 142 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 56 இடங்களும் மற்றவர்களுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பு தெரிவிக்கிறது
சத்தீஸ்கர் மாநிலத்திலும் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது, இங்கு உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 47 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெரும் எனவும் மற்றவர்கள் 3 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 122 இடங்களிலும், பாஜக 108 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு, தினம்தினம் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளால் பாஜகவின் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுவதால் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு கூறுகிறது.
Discussion about this post