ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சச்சின் பைலட். ஆட்சி கவிழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சச்சின் பைலட்டின் மனமாற்றத்தினால் காங்கிரஸ் மேலிடம் நிம்மதியடைந்துள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதல் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. மோதல் முற்றவே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் முகாமிட்டார் சச்சின் பைலட். இந்நிலையில் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேருடன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவின. முதலமைச்சர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டை பாஜக இயக்கி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஒரு மாதமாக அரசியல் குழப்பம் நீடித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சச்சின் பைலட் சந்தித்தார். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை சச்சின் பைலட் கைவிட்டார். இந்நிலையில் சச்சின் பைலட்டும் அதிருப்தி எம் எல் ஏக்களும் ராஜஸ்தான் வந்தனர். முதலமைச்சர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இதன்மூலம் கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்திற்கு சச்சின் பைலட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் சட்டப்பேரவை வெள்ளியன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது. 200 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 107 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களை விட, அதிக எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளதால், காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் அரசியல் களத்தில் இறுதி நிமிடத்தில் அதிரடி திருப்பங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதால், ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது யூகிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது…
Discussion about this post