கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மறுபுறம் தடுப்பு மருந்தின் நம்பகத் தன்மை குறித்து உலக நாடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. வரைமுறையற்ற பொருளாதார வளர்ச்சியிலும், ஆயுத குவிப்பிலும் முழு ஆற்றலையும் செலவிட்ட உலக நாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது கொரோனா. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதா, இந்த பேராபத்திலிருந்து மீண்டு விட மாட்டோமா என உலக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான உலகம் அதீத ஆர்வம் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் ஆரம்பகட்ட பரிசோதனையில் உள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஸ்புட்னிக் வி (SPUTNIK V) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை, ரஷ்யாவின் (Gamaleya )கேமிலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்புத்துறை இணைந்து தயாரித்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் தனது மகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதோடு தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக அறிவித்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் அதன் நம்பகத் தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. ஜூன் 18ம் தேதி மனிதர்கள் மீதான தனது முதல் சோதனையை துவங்கிய ரஷ்யா, முதல் கட்ட பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இரண்டாவது கட்ட சோதனையை துவங்கியது. மேலும் மனிதர்கள் மீதான 2வது கட்ட பரிசோதனை மட்டுமே வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அவசர அவசரமாக தடுப்பூசி வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பு மருந்து, ரஷ்யாவிற்கு முன்பாகவே தனது இரண்டு கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. தற்போது உலகம் முழுவதும் 3வது கட்டப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3வது கட்ட சோதனைகள் நிறைவடையாமல் தடுப்பு மருந்தை பயன்படுத்துவது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை ரஷ்ய தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளன. இரண்டாவது உலகப் போர் துவங்கியது முதல் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வல்லரசு சண்டை நீடித்து வருகிறது. இந்தப் போட்டியில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வகையில், தடுப்பு மருந்து தயாரிப்பில் ரஷ்யா அவசரம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தனை விமர்சனங்களையும் கடந்து, தடுப்பு மருந்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்புட்னிக் வி (SPUTNIK V) தடுப்பு மருந்தின் பாதுகாப்பை உறுதி செய்தால், உலக நாடுகள் மத்தியில் ரஷ்யாவின் செல்வாக்கு மேலும் உயரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Discussion about this post