100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற பிரபலமான வசனத்தை நாம் அனைவருமே கேட்டிருப்போம்.. உண்மையிலேயே இந்திய தண்டனைச் சட்டத்தில் அந்த சொல் இடம்பெற்றுள்ளதா? சட்டப் புத்தகத்தில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதா? என்பது குறித்த தேடலை தொடங்கினார் நமது நியூஸ் ஜெ-வின் நீதிமன்ற செய்தியாளர் ஜெகதீஷ். அவர் தேடிக் கொண்டு வந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…
நம்முடைய இந்திய தண்டனைச் சட்டத்தை பொறுத்தவரை கிரிமினல் வழக்குகளில் குற்றத்தை உரிய சாட்சியங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு.
இந்த இடத்தில் தான், 100 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற கோட்பாடு உருவாகி, அவை இன்றளவும் நீதிமன்றங்களில் கடைபிடிக்கப்படுகிறது. திரைப்படங்களிலும் இந்த புகழ்பெற்ற வசனம் காலம்காலமாக இடம்பெறுகிறது.
இந்த சொல்லாடல், வில்லியம் பிளாக் ஸ்டோன் என்னும் இங்கிலாந்து நீதிபதியால் 1760 ல் சொல்லப்பட்டு கால ஓட்டத்தில் உலகம் முழுக்க பரவியதாக கூறுகின்றனர் வழக்கறிஞர்கள்.
பார் கவுன்சில் விதிகளின்படி ஒரு கொலை செய்துவிட்டேன் என அந்த கொலையாளியே காவல் நிலையத்தில் வந்து ஒப்புக் கொண்டாலும் அதன் பின்னுள்ள உண்மைத்தன்மையையும், அதற்கு போதுமான சாட்சிகள் உள்ளதா என்பதையும் சட்டப்படி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளதென வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்…
இந்த சொற்றொடரின் அடிப்படை 100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்பதல்ல, எக்காரணம் கொண்டும் நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதே.. சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என்ற பேரறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உள்ளது. அதன்படி வழக்காடு மன்றம் என்பது வலுத்தவனுக்கும், இளைத்தவனுக்கும் இடையே இல்லாமல் நீதிக்கும், அநீதிக்கும் இடையிலானதாக இருந்தால் 100 குற்றவாளிகளும் தப்பிக்க மாட்டார்கள், ஒரு நிரபராதியும் தண்டிக்கப்பட மாட்டான்.
Discussion about this post