கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அடுத்த பெட்டிமுடி என்ற இடத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவை உலுக்கிய நிலச்சரிவுகளை இப்போது பார்ப்போம்..
1948-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதியன்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுதந்திர இந்தியா எதிர்கொண்ட முதலாவது பெரிய நிலச்சரிவு இது.
1968-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்-கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1000 பேர் பலியாகினர். இந்நிலச்சரிவில் 60 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை ஒன்று தூள் தூளாக நொறுங்கி போனது.
1998-ம் ஆண்டு ஆகஸ்ட் 11 மற்றும் 17- ஆகிய தேதிகளுக்கு இடையே உத்தர்கண்ட் மாநிலத்தில் மால்பா என்ற கிராமத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 380 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தையே நிலைகுலையச் செய்தது இந்த நிலச்சரிவு.
2000-ம் ஆண்டு ஜுலை 12-ந் தேதி மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை புறநகரான கட்கோபரில் நடந்த நிலச்சரிவில் 78 பேர் உயிரிழந்தனர். புறநகர் ரயில்கள் சிலவும் இதில் சிக்கின.
2001- நவம்பர் 9-ந் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த அம்பூரி என்ற இடத்தில் குருசுமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40 பேர் உயிரிழந்தனர். தலைநகருக்கு அருகிலேயே நடந்த இந்த நிலச்சரிவு இயற்கையை பாதுகாப்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
2013 ஜுன் 16-ந் தேதி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தான் இந்தியாவின் மிக மோசமான நிலச்சரிவு. கொட்டித் தீர்த்த மேகச்சுனாமி மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தாலும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவாலும் 5700 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் மூழ்கி போயின.
2014-ம் ஆண்டு ஜுலை 30-ந் தேதியன்று மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டம் அம்பேகான் தாலுகாவில் உள்ள மாலின் என்ற கிராமத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 151 பேர் பலியாகினர்.
Discussion about this post