கர்ணன் கவசத்தோடு ஒட்டிப் பிறந்தான் என்பது புராணம். ஆனால் இன்றைய தேதியில் முக கவசத்தோடு நடமாட வேண்டியது கொரோனா காலத்தின் கட்டாயம். கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் முக கவசம், நம்மை அறியாமலேயே பிற நோய்களுக்கும் காரணியாக அமைந்து விடுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அது என்ன? எப்படி? அதிலிருந்து மீள்வது எவ்வாறு?
இப்படி திரும்பிய திசையெல்லாம் முக கவசம் அணிந்து நடமாடுவது நல்லது தான். ஆனால் நம்மில் எத்தனைப் பேர் கவனித்து இருப்போம், முக கவசம் அணியும் போது நம் மூச்சுக்காற்று சிறிது நேரத்தில் துர்நாற்றமாக மாறுவதை.. மூக்கையும், வாயையும் ஒருசேர மூடி இருப்பதால் இப்படி மாறுவதாக நாம் நினைப்பதுண்டு. ஆனால் ஒருசிலருக்கு பற்களில் அல்லது வாயின் உட்புறத்தில் ஏற்படும் நோயினால் கூட அந்த துர்நாற்றம் வரக்கூடும். அதனை முக கவசத்தால் வருவதாக நினைத்து கடந்து போனால் அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். முக கவசம் அணிவதால் வாய் வறண்டு போய் உமிழ்நீர் சுரப்பது குறைவதாகவும், அதனால் எளிதில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாவதாகவும் கூறுகின்றனர் மருத்துவர்கள். உமிழ்நீர் தான் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் திறன் கொண்டது. ஆனால் உமிழ்நீர் குறைவாக சுரக்கும் வாயில், பாக்டீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகின்றன. அதன் ஆரம்ப அறிகுறி தான் துர்நாற்றம் என்கிறனர் அவர்கள்.
முக கவசம் அணிந்திருக்கும்போது மனிதர்கள் தண்ணீரை குறைவாக குடிப்பதாகவும், ஊரடங்கு காலத்தில் வீட்டில் அதிகநேரம் செலவிடுவதால் காபி மற்றும் மதுபானங்களை அதிகளவில் பெரும்பாலானோர் உட்கொள்வதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவை கூடுதல் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய காரணியாக அமைகின்றன. இந்த பாக்டீரியாக்கள் நம் பற்களுக்கு இடையில், ஈறுகளின் கீழ், நாக்கின் பின்புறம் போன்றவற்றில் தங்கி இருக்கும். நாம் சுவாசிக்கும்போது, ஈரமான மற்றும் சில நேரங்களில் கடுமையான – காற்று நம் முக கவசத்தில் பட்டு மீண்டும் நம் நாசிக்குள் செல்லும்போது அது ஒரு துர்நாற்றத்தை விட்டுச் செல்கிறது. முக கவசம் அணிந்தாலும், ஒரு நாளைக்கு மூன்று முறை பல் நாக்கு மற்றும் வாயின் உள்பகுதியை துலக்குவதன் மூலம் இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். அப்படி பல் துலக்கியும் துர்நாற்றம் வீசினால் அவர்களுக்கு ஈறு அழற்சி நோய் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஈறு அழற்சி இருப்பவர்களுக்கு பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் சல்பர் போன்ற ரசாயானத்தை வெளியிடுகின்றன. அவை அழுகிய முட்டை போன்ற நாற்றத்தை உண்டாக்கும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் மாரடைப்பு வரை செல்வதற்கான ஆபத்தை உடையது இது.
அதேபோன்று ரிச் டேவிஸ் என்ற ஆய்வாளர் முக கவசம் அணிந்தும், அணியாமலும் சோதனை ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையதளங்களில் வைரலாகி வரும் அந்த சோதனையின் முடிவில் முக கவசம் நோய்த் தொற்றை பெருமளவு குறைப்பது நிரூபணமாகி இருக்கிறது. இதுமட்டுமல்லாது முக கவசத்தை அணிவதால் லெகியானேய்ரஸ் ( Legionnaires’ Disease ) என்ற நோய் உருவாகுமோ என்ற அச்சம் கிளம்பியது. லெஜினாயெல்லா ( (Legionella)) என்ற பாக்டீரியா கலந்த நீரை பருகினால் தான் அந்த நோய் வருமென்றும் சுவாசத் திவலைகள் படிந்த முக கவசகங்களால் அந்நோய் வராது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எது எப்படியாயினும், கொரோனா தொற்றுக்கு அஞ்சி முக கவசம் அணிந்தாலும், உங்கள் மூச்சுக் காற்றின் மணத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பதே சாலச் சிறந்தது.. முக கவசம் கொரோனாவில் இருந்து காக்கும், மூச்சு தான் நம் உயிரையே காக்கும்.
Discussion about this post