சீன செல்போன் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, தொலைகாட்சிப் பெட்டிகள் இறக்குமதிக்கும் இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது. லடாக் எல்லை பிரச்னையில் கல்வான் மோதலைத் தொடர்ந்து சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையடுத்து சீனாவில் இருந்து மின்கருவிகள் எதுவும் இறக்குமதி செய்ய வேண்டாம் என மின்நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ரயில்வே துறைகளிலும் நெடுஞ்சாலைத் துறைகளிலும் சீனாவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தொலைக்காட்சி பெட்டி இறக்குமதி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ள வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம், இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. சீனாவின் தொலைக்காட்சி பெட்டி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post