தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறுவை சாகுபடி நடைபெற்று வரும் நிலையில், மழை நீடித்தால் தங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது. வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. தலைகுந்தா, அவலாஞ்சி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் பார்சன்ஸ் வேலி, முக்குருத்தி, மார்லி மந்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post