மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அது குறித்த செய்தி தொகுப்பை விரிவாக பார்க்கலாம். மதுரை மாநகரத்தின் முக்கிய பேருந்து முனையமாக பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. நாளொன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 10 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் மதுரையில், பொதுமக்கள் போக்கு வரத்து நெரிசலால் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் சீர்மிகு நகரத் திட்டத்தில் கீழ்159 கோடியே 70 லட்சம் செலவில் பெரியார் பேருந்து நிலையம், 9 புள்ளி 50 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இரண்டு பகுதிகளாக அமைய உள்ள இதில், தரைத்தளத்தில் 57 பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுவதோடு, பேருந்துகள் வந்து செல்ல தனித்தனி வாயில்கள் அமைக்கப்படவுள்ளன. குளிரூட்டப்பட்ட பயணிகள், ஓய்வு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, கட்டுப்பாட்டு அறை முதலிய வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. தானியங்கி நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், ஏடிஎம் வசதிகள்,பயணிகள் ஓய்வறை, மேல்தளத்தில் சிற்றுண்டிச் சாலை மற்றும் சிறிய சிறுவர் பூங்கா உட்பட ஏராளமான வசதிகள் அமைய உள்ளது. இத்தகைய வசதிகள் கொண்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள இந்த பெரியார் பேருந்து நிலையத்திற்காக, மதுரை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Discussion about this post